Published : 17 Mar 2023 06:10 AM
Last Updated : 17 Mar 2023 06:10 AM
புதுச்சேரி: சமூக அரசியல் சார்ந்த திறனை மாணவர்களிடையே வளர்க்கும் வகையில், புதுச்சேரியில், சட்டப் பேரவை நிகழ்வுகளை அரசுப் பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2 நாட்களாக திருவள்ளவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் அறிந்து சென்றனர். மூன்றாம் நாளான நேற்று சுசிலாபாய் அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பேரவைநிகழ்வுகளை நேரில் கண்டறிந் தனர்.
பின்னர் முதல்வர் ரங்கசா மியை அவரது அறையில் நேரில் சந்தித்து உரையாடினர். அப்போது பேசிய மாணவிகள், தங்களுக்கு சீருடைகள் வழங்கப்படவில்லை என்று முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது முதல்வர் ‘‘சீருடைகள் வாங்குவதற்கான பணம் செலுத்தப்பட்டு விட்டது.
சில நிர்வாக காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டது. இன்னும்ஓரிரு வாரத்துக்குள் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் கல்வி யாண்டின் தொடக்கத்திலேயே சீருடைகள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், மாணவிகள் தங்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பள்ளி வாயிலின் முன்பு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், தங்கள் சைக்கிள்களை நிறுத்துவதற்கு வசதியாக பள்ளிக்கு எதிரில் உள்ள சாலையோரக் கடைகளை அகற்றித் தருமாறும் கேட்டனர்.
அதற்கு முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவை தலைவர் செல்வம், மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மற்றும் கல்வித்துறை செயலர் ஜவஹர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கிடையே, நேற்று சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது பேசிய பிஆர்.சிவா (சுயே),“பள்ளி மாணவர்களுக்கு சீருடைதருவதில் ஓராண்டு தாமதம்ஏற்பட்டு, இன்னும் வழங்கப்பட வில்லை என்பதை அரசு அறியுமா? 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க கடந்த நிதி யாண்டில் அறிவிக்கப்பட்டது செயல்படுத்தப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் நமச்சிவாயம், “இந்த நிதியாண்டில் சில காரணங்களால் சீருடை வழங்க காலதாமதம் ஏற்பட்டது. அடுத்த கல்வியாண்டில் ஜூன் மாதத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT