

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை அல்லது பொறுப்பில் உள்ள நீதிபதி தலைமையிலான விசாரணை தவிர வேறேதும் பலனளிக்காது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து (25.9.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று (செப்.30) விசாரணை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை அல்லது பொறுப்பில் உள்ள நீதிபதி தலைமையிலான விசாரணை தவிர வேறேதும் பலனளிக்காது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தால் அரசுக்கு பரிந்துரைகளை மட்டுமே வழங்கமுடியும். விசாரணைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் சிபிஐ அல்லது பொறுப்பில் உள்ள நீதிபதி தலைமையிலான ஆணையத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்" என்றார்.
அனிதா தற்கொலை குறித்தும் விசாரணை தேவை..
அதேபோல், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்ததுபோல் அனிதாவின் தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் ஏதும் காரணமாக இருந்ததா? என்பது குறித்து தேசிய தாழ்த்தப்பாட்டோர் ஆணையத்துடன் தொடர்புடைய டிஜிபி பதவியில் இருக்கும் அதிகாரி மூலம் விசாரிக்க வேண்டும் என்றார்.
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட அனிதாவை டெல்லிக்கு அழைத்துச் சென்றவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.