தூத்துக்குடி | சாத்தான்குளத்தில் ஒரேநாளில் மின்சார வசதி செய்துதரப்பட்ட மாணவியின் வீட்டுக்கு சென்று வாழ்த்திய ஆட்சியர்

சாத்தான்குளத்தில் ஒரே நாளில் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்ட மாணவி பேச்சித்தாயின் வீட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,ஸ்ரீ வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ். அமிர்த ராஜ் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
சாத்தான்குளத்தில் ஒரே நாளில் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்ட மாணவி பேச்சித்தாயின் வீட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,ஸ்ரீ வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ். அமிர்த ராஜ் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஒரே நாளில் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்ட மாணவியின் வீட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

சாத்தான்குளம் வீர இடக்குடித்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி லெட்சுமி. இந்த தம்பதியருக்கு பேச்சித்தாய் என்ற மகளும், ஐயப்பன் என்ற மகனும் உள்ளனர்.

பேச்சித்தாய் பிளஸ் 2, ஐயப்பன் 5-ம் வகுப்பு படிக்கின்றனர். ஆறுமுகம் இறந்துவிட்டதால், லெட்சுமி முறுக்கு வியாபாரம் செய்து இரு குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இவர்களது வீட்டுக்கு நீண்ட காலமாக மின்சார வசதி இல்லை.

தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவி பேச்சித்தாய் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கில் சிரமப்பட்டு படித்து வந்தார். இந்த செய்தி வாட்ஸ் அப் குழுக்களில் பரவியது.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மாணவியின் வீட்டுக்கு உடனடியாக மின்சார வசதி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வருவாய் துறை, மின் துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கைஎடுத்து கடந்த 13-ம் தேதி இரவில் பேச்சித்தாய் வீட்டுக்கு மின்சார வசதி செய்தனர்.

மின் இணைப்புக்கு தேவையான வைப்புத் தொகை, வயரிங், மின் விளக்குகள் வாங்குவதற்கான செலவு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து நிதி வழங்கப்பட்டது.

ஆட்சியரின் இந்த நடவடிக்கை யால் பேச்சித்தாய் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆட்சியருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ், வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் ஆகியோர் மாணவி பேச்சித்தாயின் வீட்டுக்கு நேற்று சென்றனர்.

வீட்டில் மின்சார வசதி செய்யப் பட்டிருப்பதை பார்வையிட்ட ஆட்சியர், தேர்வில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெறுமாறு பேச்சித்தாயை வாழ்த்தினார். அவர்களுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்கவும், அந்த இடத்துக்கு பட்டா கிடைக்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த ஆட்சியர், வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவதாக தெரிவித்தார்.

இதேபோல் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கிய ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ தங்கள் வீட்டுக்கு வந்ததை கண்டு பேச்சித்தாய் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிகழ்வின்போது மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in