Published : 21 Jul 2014 04:17 PM
Last Updated : 21 Jul 2014 04:17 PM

பாஜக ஆட்சி வந்த பிறகுதான் முல்லை பெரியாறு விவகாரத்துக்கு சரியான தீர்வு கிடைத்துள்ளது- மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

எந்த ஒரு மாநிலத்தின் விஷயத்திலும் பிரதமர் நரேந்திர மோடி எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படமாட்டார். பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகுதான் முல்லை பெரியாறு விவகாரத்துக்கு சரியான முடிவு கிடைத்துள்ளது என்று தமிழக பாஜக தலைவரும், மத்திய கனரக தொழில்கள் இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக கோவை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரம் 3-வது முனையத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளிப் பருவத்தில் எதிர்ப்பு

தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை என்ற விஷயத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள் தமது தாய் மொழியான தமிழை கற்க வேண்டியது கட்டாயம். அதேபோல் நாடு தழுவிய மொழியாக விளங்கும் இந்தியைப் படிக்க விரும்பும் மாணவர்கள் படிக்கலாம். இந்த விஷயத்தில் என் தனிப்பட்ட கருத்து மற்றும் அனுபவம் என்னவென்றால், நானே பள்ளிப் பருவத்தில் இந்திக்கு எதிராக இருந்தவன்தான். அதனால் அதை படிக்காமல் விட்டுவிட்டேன். இப்போது தேவை என்று வந்த பிறகு தனி ஆசிரியரை அதற்கென அமர்த்தி கற்றுக்கொண்டேன்.

இந்தி படிக்கும் திமுகவினர்

நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் தி.மு.க எம்.பிக்கள் பலர் இந்திக்கு எதிராகப் பேசினாலும், தனித்தனியாக இந்தி படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். எனக்கு இந்தி சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களே அவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதை வெளியே சொல்ல அவர்கள் தயக்கமும், வெட்கமும் காட்டுகிறார்கள். என் நிலை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வந்து விடக்கூடாது என்பதால்தான் அவர்கள் விருப்பப்பட்டால் இந்தி கற்றுக்கொள்ளச் சொல்கிறேன். இந்தி மட்டுமல்ல, வேறு எந்த மொழியும் கற்றுக்கொள்ள விரும்புவதில் அவரவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதை தடுத்து துரோகம் செய்யக்கூடாது. இந்த மொழிதான் படிக்க வேண்டும் என்று மற்றவர்களிடம் கட்டாயப்படுத்தக் கூடாது.

பாஜக ஆட்சி அமைந்த பிறகுதான் தமிழக - கேரள முக்கியப் பிரச்சினையான முல்லை பெரியாறு விஷயத்தில் சரியான முடிவு கிடைத்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை 42 அடியாக உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சாதி, மதம் இல்லை

எந்த விஷயத்திலும், எந்த மாநிலத்துக்கும் மோடி எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட மாட்டார். ஒட்டுமொத்த தேச நலன் கருதியே அவர் முடிவு எடுப்பார். எந்த நாட்டின் மீதும் போர் தொடுப்பதை, இன்னொரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செலுத்துவதை அவர் ஆதரிப்பதில்லை. ஒருசாராருக்கு சாதகமாக நடந்து கொள்வதுமில்லை, சாதி, மதம் பார்க்கவும் மாட்டார். ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்குமே மோடி பணியாற்றி வருகிறார்.

இலங்கையுடனான உறவில் காங்கிரஸ் எடுத்திருந்த நிலைப்பாடு, தமிழ்நாட்டின் நிலைக்கு எதிரானதாக இருந்தது. ஆனால் மோடி தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும், நன்மையையும் மனதில் கொண்டே ராஜபக்சேவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இலங்கையில் ராஜபக்சே விருப்பப்பட்டபடி அங்குள்ள தமிழர்களை ஆட்டுவிக்கும் நிலைக்கு மோடி விடமாட்டார் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x