பழனிசாமி இல்லாவிட்டால் அதிமுகவை சிலர் எதிரிகளிடம் அடமானம் வைத்திருப்பார்கள் - ஆர்.பி உதயகுமார்

பழனிசாமி இல்லாவிட்டால் அதிமுகவை சிலர் எதிரிகளிடம் அடமானம் வைத்திருப்பார்கள் - ஆர்.பி உதயகுமார்
Updated on
1 min read

மதுரை: ‘‘கே.பழனிசாமி இல்லாவிட்டால் அதிமுகவை சிலர் எதிரிகளிடம் அடமானம் வைத்திருப்பார்கள்’’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை புறநகர் அதிமுக மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள செல்லம்பட்டியில் புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டைகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, தவசி, மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, "கே.பழனிசாமி இல்லாவிட்டால் இன்று இந்த இயக்கத்தை சிலர் எதிரிகளிடம் அடகு வைத்திருப்பார்கள். தென்மாவட்டங்களில் கே.பழனிசாமிக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதை பொறுத்து கொள்ள முடியாமல், அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

உளவுத்துறை அரசிற்கு ஒரு அறிக்கையை சமர்பித்து உள்ளதாக தகவல் வருகிறது. ஏற்கனவே கே.பழனிசாமிக்கு மக்களிடம் 50 சதவீதம் செல்வாக்கு இருந்தது. இதில் பொய் வழக்கு போட்டதால் 80 சதவீதமாக செல்வாக்கு அதிகரித்து உள்ளதாகவும், இந்த வழக்கிலிருந்து கே.பழனிசாமியை விடுவிக்காமல் இருந்தால் 100 சதவீதமாக செல்வாக்கு அதிகரித்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால், வரும் மக்களவைத் தேர்தலில் கே.பழனிசாமி தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியை பெறும்.

கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி தேதியை, கேரள அரசு மாற்றி அறிவித்துள்ளதால் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் தேதி அறிவிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே கேரளா அரசு வேறு தேதியை அறிவித்ததால் பரபரப்பும், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் திக்கு தெரியாமல், இன்றைக்கு இந்த அரசு மீது நம்பிக்கை வைத்த இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்" இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in