

மதுரை: மதுரையில் ரூ.1.45 கோடி கள்ள நோட்டு பறிமுதல் வழக்கில் போலீஸார் தேடி வரும் தீவிர குற்றத்தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையில் தீவிர குற்றத்தடுப்பு காவல் பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஆனந்த். இவர் வாகனச் சோதனையில் 2 கார்டுகளில் 3 மூடைகளில் கொண்டுச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தார். இந்தப் பணத்தை முழுமையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், திருமங்கலம் காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் ஆனந்த் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து ஆனந்த் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் அங்கிருந்து ரூ.1.45 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆனந்த் மீது குற்றப்பிரிவு போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் ஆனந்த் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இன்று விசாரித்தார்.
அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், ''மனுதாரர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. கள்ள நோட்டு கும்பலிடம் பறிமுதல் செய்த ரூ.25 லட்சத்தில் ரூ.16 லட்சத்தை மட்டும் காவல் நிலைய கணக்கில் காட்டியுள்ளார். மீதமுள்ள ரூ.9 லட்சத்தை அவரே வைத்துக் கொண்டார். அதில் ரூ.8 லட்சத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
நகை திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்த நகைகளை உரிமையாளர்களிடம் முழுமையாக திரும்ப வழங்காமல் இருந்துள்ளார். திருட்டு நகைகளை வாங்கியவர்களை மிரட்டி ரூ.15 லட்சம் பறித்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. முன்ஜாமீன் வழங்கக்கூடாது'' என்றார்.
இதையடுத்து ஆனந்த் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.