Published : 16 Mar 2023 07:15 PM
Last Updated : 16 Mar 2023 07:15 PM

எண்ணூர் - மகாபலிபுரம்: 3 மாவட்டங்களை இணைத்து 133 கி.மீ தூர ரயில் பாதைக்கான சாத்தியக் கூறுகளை ஆராய திட்டம்

மகாபலிபுரம் சாலை | கோப்புப் படம்

சென்னை: எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையில் 3 மாவட்டங்களை இணைத்து 133 கி.மீ தூரம் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆய்வு செய்யவுள்ளது.

சென்னை இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாலை வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழக நெடுஞ்சாலைத் துறை சென்னை எல்லை சாலை திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த எல்லைச் சாலையானது 5 பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. அவை:

  • எண்ணூர் துறைமுகம் முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 16-ல் தச்சூர் வரை - 25.31 கி.மீ
  • தேசிய நெடுஞ்சாலை எண் 16ல் தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை ஆரம்பம் வரை - 26.10 கி.மீ
  • திருவள்ளூர் புறவழிச்சாலை ஆரம்பம் முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 48-ல் ஸ்ரீபெரும்புதூர் வரை - 30.10 கி.மீ
  • தேசிய நெடுஞ்சாலை எண் 48-ல் ஸ்ரீபெரும்புதூர் முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 32-ல் சிங்க பெருமாள் கோவில் வரை - 23.80 கி.மீ
  • தேசிய நெடுஞ்சாலை எண் 32-ல் சிங்க பெருமாள் கோவில் முதல் மகாபலிபுரம் வரை - 27.47 கி.மீ

இந்த சாலையானது மொத்தம் 3 மாவட்டங்களை இணைத்து 133 கி.மீ தூரம் அமைக்கப்படவுள்ளது. மொத்தம் 12 ஆயிரம் கோடி செலவில் இந்த சாலைப் பணிகளை 2025-ம் ஆண்டில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சாலை செல்லும் வழியில் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் 3 வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைப்பது தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னை எல்லைச் சாலை, தாம்பரம் - செங்கல்பட்டு இடையில் 4-வது ரயில் பாதை, அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு என்று இந்த 3 வழித்தடங்களில் ரயில் பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கும்" என்று அவர்கள் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x