Last Updated : 16 Mar, 2023 03:19 PM

 

Published : 16 Mar 2023 03:19 PM
Last Updated : 16 Mar 2023 03:19 PM

புதுச்சேரியில் புதிதாக தொழிற்சாலைகளை தொடங்கினால் ஜிஎஸ்டி வரி, மின் கட்டண சலுகை: பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி: “புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க, ஜிஎஸ்டி வரி மற்றும் மின்கட்டணத்தில் சலுகை தர அரசாணை வெளியாகவுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தொடங்கினால் 3 ஆண்டுகளுக்கு எந்தச் சான்றிதழும் தேவையில்லை” என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

சிவசங்கர் (பாஜக), அங்காளன்(சுயேட்சை): “புதிய தொழில்களை ஈர்க்க புதிய தொழில் கொள்கைக்கான பரிந்துரைகளை செய்ய வல்லுநர் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? கவர்ச்சிகரமான புதிய தொழில் கொள்கையை அரசு உருவாக்குமா? முதலீட்டாளர்கள் மாநாடை அரசு நடத்துமா?”

அமைச்சர் நமச்சிவாயம்: “வல்லுநர் குழு அமைக்கப்படும், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.”

சிவசங்கர் (பாஜக): “புதிய தொழிலுக்காக விண்ணப்பிப்பவர்கள், உரிமம் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர். சில தொழிற்சாலைகள் நம்பிக்கையோடு கடன் பெற்று தொடங்கியும், அனுமதி கிடைக்காததால் நஷ்டத்தோடு வெளியேறுகின்றனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு அரசு முடிவுகட்ட வேண்டும். புதிய தொழில் தொடங்க புதுவைக்கு வருபவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்க வேண்டும்”

கல்யாண சுந்தரம் (பாஜக): “கடந்த 15 ஆண்டுகளாக புதிய தொழிற்சாலைகள் எதுவும் புதுச்சேரிக்கு வரவில்லை. தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு பல தொழிற்சாலைகள் சென்றுவிட்டன. இதற்கு காரணம், தொழிற்சங்கம் என்ற பெயரிலும், சாதி பெயரிலும் சில அமைப்புகள் தொழில் தொடங்க வருபவர்களுக்கு கடும் இடையூறு விளைவிக்கின்றனர். லெட்டர்பேடு அமைப்பு வைத்துள்ளவர்களால் தொழில் தொடங்க வருபவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. இதனால்தான் பல தொழிற்சாலைகள் தொடங்கும் எண்ணத்தை கைவிட்டு செல்கின்றனர். தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்”

எதிர்கட்சித் தலைவர் சிவா: “15 ஆண்டுகளாக ஒற்றைச் சாளர முறை தொழில்துறையில் கடைபிடிக்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து வைத்துள்ளோம். இந்த நிலத்தை தொழில் தொடங்க இதுவரை வழங்கவில்லை.”

அமைச்சர் நமச்சிவாயம்: “2016-ல் புதிய தொழில் கொள்கை அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில் கொள்கையில் இடம்பெற்றதில் பாதியளவு கூட அரசாணையாக வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்டி வரியில் சலுகை, மின் கட்டணத்தில் சலுகை ஆகியவற்றில் அரசாணை வெளியிட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தொடங்கினால் 3 ஆண்டு எந்தச் சான்றிதழும் தேவையில்லை என அறிவித்துள்ளோம். ரூ.100 கோடி முதலீட்டிற்கு மேல் தொழில் தொடங்குவோருக்கு ஆண்டுக்கு ஒரு சதவீதம் வீதம் 5 ஆண்டுகளுக்கு 5 சதவீதம் மானியம் வழங்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் தொழிற்பேட்டைகளில் சாலை, குடிநீர் உட்பட அடிப்படை வசதி செய்ய சில பகுதிகளில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சில பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x