Published : 16 Mar 2023 04:58 AM
Last Updated : 16 Mar 2023 04:58 AM

எழுத்தாளர் சிவசங்கரிக்கு ‘சரஸ்வதி சம்மான்’ - கே.கே.பிர்லா அறக்கட்டளை விருது அறிவிப்பு

எழுத்தாளர் சிவசங்கரி

சென்னை: 2022-ம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் இலக்கிய விருதுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘சூரிய வம்சம் - நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் சிறந்த இலக்கிய படைப்பாளிக்கு சரஸ்வதி சம்மான் இலக்கிய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருதை கே.கே.பிர்லா அறக்கட்டளை கடந்த 1991-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இந்த விருது, ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

கடந்த 10 ஆண்டு காலத்தில் எழுத்தாளரின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டுவிருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் இலக்கிய விருதுக்கு தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘சூரியவம்சம் - நினைவலைகள்’: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி தலைமையிலான தேர்வுக்குழு விருதாளரைத் தேர்வு செய்துள்ளது. சிவசங்கரி கடந்த 2019-ம் ஆண்டு எழுதிய ‘சூரியவம்சம் - நினைவலைகள்’ என்ற நூலுக்காக, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கே.கே.பிர்லா அறக்கட்டளை இயக்குநர் சுரேஷ் ரிதுபர்னா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x