Published : 24 Sep 2017 11:05 AM
Last Updated : 24 Sep 2017 11:05 AM

‘ஏழை பசங்க நாங்க…எங்கே படிக்க போவோம்’: காந்தி மியூசிய வளாகத்தில் படிக்க தடையால் மாணவர்கள் ஏமாற்றம்

காந்தி மியூசியத்தில் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு படித்து வந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதுரையில் காந்தி மியூசியம் முக்கியமான சுற்றுலா இடம். காந்தி கால்பதித்த மதுரையில் அமைந்திருக்கும் காந்தி மியூசியம், சமீப காலமாக அரசுக்கு பணியாளர்களை உருவாக்கும் இடமாகவும் இருந்தது. அந்தளவுக்கு இங்குள்ள மரத்தடிகளில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் பணிகளில் சேர்ந்தனர். இப்படி அரசு பணிக்கு ராசியான காந்திமியூசிய வளாகத்திற்கு தினமும் 400 முதல் 500 மாணவர்கள் படிக்க வருவார்கள். அவர்கள் குழு குழுவாக மரத்தடிகளில் அமர்ந்து படிப்பார்கள்.

மிக அமைதியான மரங்கள் நிரம்பிய சூழலை கொண்ட இந்த வளாகம் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இங்கு படிப்பதற்காகவே கிராமப்புறங்களில் இருந்து ஏழை மாணவ, மாணவிகள், சாப்பாடு பார்சலுடன் வந்து படிப்பார்கள்.இந்நிலையில் ‘நீட்’ தேர்வு விவகாரம் சூடுபிடித்தபோது காந்திமியூசியம், மதுரை மாநகராட்சி வளாகத்துக்குள் மாணவர்கள் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ‘நீட்’ விவகாரம் முடிவுக்கு வந்தபிறகு மாநகராட்சி வளாகத்தில் மாணவர்கள் வழக்கம்போல படிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், போராட்டங்கள் முடிவு பெற்ற நிலையிலும் காந்தி மியூசியத்தில் மாணவர்கள் படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதனால், தினமும் பலநூறு பேர் நாள் முழுவதும் மரத்தடிகளில் அமர்ந்து படித்த காந்தி மியூசிய வளாகம், தற்போது மாணவர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மாணவர்கள், தினமும் காந்திமியூசியத்திற்கு படிக்க வந்து அனுமதி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர் பி.கண்ணன், கூறியதாவது: நாங்கள் முழுக்க முழுக்க போட்டித் தேர்வுக்காக இங்கு படிக்க வருபவர்கள். யாரும் எந்த போராட்டத்திலும் பங்கேற்றதில்லை.

இங்கு படிக்க அனுமதிக்கக் கோரி, ஆட்சியர் மற்றும் அமைச்சரை சந்தித்தோம். யாரும் எங்கள் கோரிக்கையை செவிமடுக்கவில்லை. வசதியான மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் படிக்கின்றனர். எங்களை போன்ற ஏழை மாணவர்கள் எங்கே போய் படிப்போம். கடந்த 10 ஆண்டுகளில் காந்திமியூசியத்தில் படித்த பல மாணவர்கள் சப்-கலெக்டர் உள்ளிட்ட பணிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசு பணி கனவு நிறைவேறும் வரை ஒவ்வொரு மாணவரும் இங்கு பல ஆண்டுகள் படிக்க வருவார்கள். தற்போது ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கூறி எங்களை படிக்க வர விடாமல் தடுக்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x