இனிவரும் தேர்தல்களில் திமுகவை வீழ்த்த ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் வர வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

இனிவரும் தேர்தல்களில் திமுகவை வீழ்த்த ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் வர வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: அடுத்தாண்டு நடைபெறவுள்ள எம்.பி. தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6-ம் ஆண்டு தொடக்கவிழா நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதையடுத்து கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பிரமாண்ட கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை டிடிவி.தினகரன் ஏற்றிவைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல்புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து, விசாரித்து அனைவரையும் சிறையில் தள்ளுவோம் என்றனர். மாறாக முன்னாள்அமைச்சர்கள் திமுகவுடன் இணக்கமாகச் செல்கின்றனர். பழனிசாமி தலைமையில் அதிமுக பிராந்திய, வட்டாரக் கட்சியாகிவிட்டது.

அதிமுக பலவீனமாக இருந்ததால்தான் 20 மாத ஆட்சியில் பொதுமக்களிடம் கெட்ட பெயர் எடுத்துள்ள நிலையிலும் திமுகவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற முடிந்தது.

இனிவரும் எம்.பி. தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள், திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். பழனிசாமி செய்த துரோகத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும். அவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in