

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு விரைவில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணி களை மாநிலம் முழுவதும் பழனிசாமி தொடங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் உச்ச பதவியாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகள்உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் பொறுப்பு வகித்து வந்தனர்.
2021 சட்டப்பேரவை தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் அறிவிப்பிலும், தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை பெறுவதிலும், கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்திலும் பிரச்சினைகள் எழுந்த நிலையில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் சரியாக இருக்கும் என பழனிசாமி முடிவு செய்தார்.
நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.
இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. தீர்மானங்கள் செல்லுமா என்பது குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிடாத நிலையில், இந்த தீர்ப்பைபழனிசாமி தரப்பு வரவேற்று கொண்டாடி வருகிறது.
தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும், அதைபொருட்படுத்தாமல், நம்பிக்கையுடன் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை பழனிசாமி தொடங்கியுள்ளார்.
தலைமை அறிவுறுத்தல்: முதற்கட்டமாக தொண்டர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் தொகுதி,பகுதி, வட்டம் மற்றும் கிராம, நகரகிளைகள் என அனைத்து நிலைகளிலும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில் தேர்தல் பணிமனைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தலைமை அறிவுறுத்தல்படி, கட்சியின் அனைத்து தொண்டர்களுக்கும் உறுப்பினர் அட்டையை, உரிமைச் சீட்டு என வழங்கி வரு கிறோம்.
இந்த முறை, கியூஆர் கோடு வசதியுடன் கூடிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் போலி உறுப்பினர் அட்டைகளை எளிதில் கண்டறிய முடியும். உண்மையான அட்டையை ஸ்கேன் செய்தால் மட்டுமே உறுப்பினரின் பெயர், முகவரி, வகிக்கும் பதவி, கட்சியில் சேர்ந்த நாள் உள்ளிட்ட விவரங்களைக் காட்டும்.
இந்த தேர்தலில் பழனிசாமி போட்டியின்றி வெற்றிபெற அதிகவாய்ப்புகள் உள்ளன. அவரைஎதிர்த்து யாரும் போட்டியிடப்போவதில்லை என நம்புகிறோம். ஒருவேளை தேர்தல் நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. கட்சித் தலைமையின் அடுத்தகட்ட உத்தரவுக்காக காத்திருக்கிறோம். விரைவில் தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.