

நாகர்கோவில்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒரு நாள் பயணமாக 18-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.
டெல்லியில் இருந்து அன்று காலை 10 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் குடியரசு தலைவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.
பின்னர் கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்லும் அவர், தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட உள்ளார். பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார்.
பின்னர், அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். மாலை ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.