Published : 16 Mar 2023 06:06 AM
Last Updated : 16 Mar 2023 06:06 AM

திருப்பூர் | ஊதியூரில் கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகள் அமைத்து வனத்துறை கண்காணிப்பு

ஊதியூர் மலைப்ப குதியில் கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் திரண்ட பொதுமக்கள்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அடுத்த காசிலிங்கம்பாளையத்தில் சாமிநாதன் என்பவர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, 2 மாத கன்றுக்குட்டியை அடித்து கொன்றசம்பவத்தால் அப்பகுதி மக்கள்அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகள் அமைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காசிலிங்கம்பாளையம் பொதுமக்கள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் நடமாடும் சிறுத்தையால், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தை, அடுத்தடுத்து கால்நடைகளை தாக்க வாய்ப்புள்ளது. எனவே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு சிறுத்தையை பிடிக்க வேண்டும்’’ என்றனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், காங்கயம் வனச்சரகர் தனபால் தலைமையிலான வனத்துறையினர் ஊதியூர், காசிலிங்கம்பாளையம், தாயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே ஊதியூரை சேர்ந்த பெண், நேற்றுமதியம் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

ஸ்ரீகொங்கண சித்தர் குகைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாமென
வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பதாகை .

அதன் பேரில் அந்தபகுதியில் 7 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊதியூர் மலை மற்றும் மலைமேல் உள்ள உத்தண்ட வேலாயுதசுவாமி கோயிலுக்கும், ஸ்ரீகொங்கண சித்தர் குகைக்கும் மாலை 4 மணிக்கு மேல் செல்ல வேண்டாம் என காங்கயம் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோயில் நுழைவுவாயில் முன்பாக சிறுத்தை நடமாட்டம் குறித்த எச்சரிக்கை பதாகையையும் வனத்துறையினர் வைத்துள்ளனர். அப்பகுதியில் தங்கியிருந்த ஆதரவற்றவர்களை, வேறிடத்துக்கு செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காங்கயம் வனச்சரகர் தனபால் கூறும்போது, ‘‘கண்காணிப்புக் கேமராவில் சிறுத்தையின் உருவம் இதுவரை பதிவாகவில்லை. சம்பவ இடத்தில் பதிந்துள்ள கால் தடங்களை வைத்து வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உடுமலையிலிருந்து வேட்டைத் தடுப்புகாவலர்கள் 10 பேர் கொண்ட குழுவினர், சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகளை வைத்துள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x