

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தி விதிகளை மீறி, அண்டை மாநிலங்களுக்குப் பால் விற்பனை செய்த 2,000 சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சங்கங்கள் கலைக்கப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் தோல் கழலை நோய் பரவுவது தடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சில மாடுகளுக்கு இந்த நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தாலும், சிகிச்சையால் மாடுகள் இறப்பு தடுக்கப்பட்டது.
பால் தட்டுப்பாட்டைப் போக்க, மார்ச் 16-ம் தேதி (இன்று) பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஹோலி பண்டிகைக்காக, வட மாநிலத்தவர்கள் விடுமுறையில் சென்றதால் கடந்த சில நாட்களுக்கு முன் லாரிகளில் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த நிலை சீர் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சீரான முறையில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.