

தருமபுரி: இணைய சேவை பின்னடைவு காரணமாக, தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளின் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கான வளரறி மதிப்பீடு சார்ந்த ஆன்லைன் தேர்வு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவி யருக்கு, ‘மாநில மதிப்பீட்டுப் புலம்’ எனும் திட்டம் மூலம் வளரறி மதிப்பீடு சார்ந்த ஆன்லைன் தேர்வுகள் சுமார் 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோன்ற தேர்வு நடப்பு கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வளரறி மதிப்பீடு சார்ந்த விநாடி-வினா தொடர்பான இந்த ஆன்லைன் தேர்வு நடத்தும் பணிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நிர்வகிக்கிறது.
அதன்படி, கடந்த மாதம் 16-ம் தேதி முதல் இந்தத் தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. பள்ளிகளில் உள்ள கணினிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
சுமார் 5 மாவட்டங்களை உள்ளடக்கி அணிகள் பிரிக்கப் படுகிறது. ஒவ்வொரு அணியில் இடம்பெறும் மாவட்டங்களும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தேதிகளில் இத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். தற்போது பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங் களுக்கு தேர்வு நடந்து வருகிறது.
ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு இணைய வசதி மிகவும் அவசியம். ஆனால், அரசுப் பள்ளி உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணைய வசதி குறைந்த வேகம் கொண்டதாக உள்ளதால் இந்த ஆன்லைன் தேர்வை உரிய நேரத்தில் நடத்தி முடிக்க முடியாமல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியது: 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள வளரறி மதிப்பீடு சார்ந்த விநாடி வினா ஆன்லைன் தேர்வு மாணவ, மாணவியருக்கு மிகவும் பயன் தரக்கூடிய தேர்வு. அவர்களின் திறன்கள் இத்தேர்வால் மேலும் அதிகரிக்கும். அதேநேரம், இந்த தேர்வை நடத்த அதிவேக அல்லது வேக இணையம் மிகவும் அவசியம்.
தற்போது வழங்கப்பட்டுள்ள இணைய வசதியின் வேகம் குறைவாக இருப்பதால், தேர்வுக்கான குறிப்பிட்ட பக்கத்தில் உள்நுழையவே அதிக நேரம் தேவைப் படுகிறது.
ஒவ்வொரு மாணவருக்கும் இவ்வாறு கூடுதல் நேரத்தை செலவழித்தே விநாடி வினா பக்கத்துக்குள் ‘லாகின்’ செய்து தர முடிகிறது. உள்நுழைந்த பிறகும் கூட மாணவர்களால் விரைந்து அல்லது ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் தேர்வை முடிக்க முடியாத வகையில், வேகக் குறைவான இணையம் இடையூறு ஏற்படுத்துகிறது.
இதனால், இந்த தேர்வுக்காகவே ஆசிரியர்களும் கூடுதல் நேரம் செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நேரம் விரயம் ஆவதால், ஆண்டு இறுதித் தேர்வு நெருங்கிவரும் சூழலில் மாணவ, மாணவியரை அதுசார்ந்து தயார்படுத்தும் பணிகளில் ஆசிரியர்களால் முழுமையாக ஈடுபட முடியவில்லை.
இதன் தாக்கம், குழந்தைகளின் இறுதித் தேர்வு மதிப்பெண்களில் எதிரொலிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, வளரறி மதிப்பீடு ஆன்லைன் தேர்வை நடைமுறை சிரமங்களின்றி விரைந்து நடத்தும் வகையில் இணைய வசதியை மேம்படுத்தி வழங்கிட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.