

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 27-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, மாநகராட்சி அதிகாரிகளே பட்ஜெட்டை தயாரித்து, வெளியிட்டு வந்தனர். கடந்த ஆண்டு மேயர், துணை மேயர் இருந்தாலும், குறுகிய காலமே இருந்ததால், அதிகாரிகள் தயாரித்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டு மேயர் ஆர்.பிரியா தலைமையில், மாமன்ற நிலைக் குழுக்கள் மூலம், துறை வாரியான தேவைகள், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோக்கப்பட்டு, மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “தமிழக அரசின் பட்ஜெட் வரும் 20-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் ஒதுக்கப்படும் நிதி குறித்து ஆலோசித்து, மாநகராட்சி பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். வரும் 27-ம் தேதி நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில், நிலைக் குழுத் தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். வரும் 28-ம் தேதியும் மன்றக் கூட்டம் நடைபெறும். அதில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்” என்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, “மாநகரம் முழுவதும் மழைநீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில், வடிகால்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எங்கும் கழிவுநீர் தேங்காத நிலையை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பான செயல் திட்டத்தை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். மேலும், ஆக்கப்பூர்வமான, அறிவியல் ரீதியிலான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்” என்றனர்.