

சென்னை: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் சங்கங்களின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால், சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர், மின் துறை மற்றும் எம்எஸ்எம்இ அமைச்சரிடம் பலமுறை நேரில் கோரிக்கை விடுத்தோம். மின் கட்டண உயர்வைக் குறைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
மேலும், உச்சநேர காலகட்டத்துக்கு கூடுதலாக செலுத்த வேண்டிய மின் கட்டண உயர்வை 25 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக குறைப்பதாக அமைச்சர் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனினும், 10 சதவீத கட்டண உயர்வைக் குறைக்க, மின் இணைப்புடன் ‘டிஓடி மீட்டர்’ (Time of Day metering -TOD) இணைக்கப்பட வேண்டும். அதற்கு பிறகுதான் இந்த சலுகை கிடைக்கும். அதுவரை ஒவ்வொரு மாதமும் தொழிற்சாலை செயல்படாத உச்சநேர காலகட்டத்துக்கும் சேர்த்து 25 சதவீதம் கூடுதல் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனால், சிறு, குறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
டிஓடி மீட்டரை அனைவருக்கும் வழங்க வேண்டியது தமிழ்நாடு மின் வாரியத்தின் கடமை. மின் வாரியத்திடம் இந்த மீட்டர் கையிருப்பு இல்லாததால், அனைவருக்கும் இந்த மீட்டர் வழங்க குறைந்தது ஒரு வருடம் ஆகும். எனவே, டிஓடி மீட்டரை இணைக்கும் வரை, தமிழ்நாடு மின் வாரியம் உச்சநேர காலகட்டத்துக்கு கூடுதலாக 25 சதவீத கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.
மேலும், பருவ காலங்களில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் மற்றும் குளிர்சாதனக் கிடங்குகளுக்கு ஆண்டுதோறும் நிலையான மின்சார கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. பயன்படுத்தும் காலத்துக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும்.