

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காசநோய் தடுப்பு மையம் போதிய இடவசதியின்றி பழைய கட்டிடத்தில் செயல்படுவதால் நோயாளிகள், பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட காசநோய் தடுப்பு மையத்தில் மத்திய அரசின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு ஒரு துணை இயக்குநர், ஒரு மருத்துவ அலுவலர், ஆய்வக நுட்புநர்கள் 2 பேர், மருந்தாளுநர் ஒருவர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் என 12 பேர் பணியாற்றுகின்றனர். மேலும் இம்மையத்தின் பணியாளர்களாக மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த மையம் முன்பு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகள் வார்டு வசதியுடன் தனிக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையாக மாற்றப்பட்டதை அடுத்து, காசநோய் மையம் செயல்பட்டு வந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து காசநோய் மையம், தற்போதுள்ள மருத்துவமனையின் பழைய கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகிறது.
இங்கு போதிய இடவசதி இல்லாததால் காசநோயாளி களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமலும், மருந்து, மாத்திரைகள், சளி பரிசோதனை இயந்திரங்களை பாதுகாக்க முடியாமலும் பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவக் கல்வி இயக்குநரகத் தின் கீழும், மாவட்ட காசநோய் மையம் மருத்துவப் பணிகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழும் வெவ்வேறு துறையாக மாறி விட்டதால், மாவட்ட காசநோய் மையத்தை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு செல்ல அறிவுறுத்தினர். அதனால் இம்மையத்துக்கு வெளியில் இடம் பார்த்தனர்.
தற்போது அரசு செவிலியர் கல்லூரி இயங்கி வரும் பகுதியில் போதிய இடம் உள்ளது என மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர், துணை இயக்குநர்(காசநோய்) ஆகியோர், முன்பு மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் தெரிவித்தனர். அவரும் அந்த இடத்தை ஒதுக்கித் தர வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார். ஆனால் இன்று வரை அந்த இடமோ, வேறு இடமோ ஒதுக்கப்படவில்லை.
எனவே, காசநோய் மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கித் தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என இம்மைய பணியாளர்களும், நோயாளிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.