

ஆண்டிபட்டி: வைகை அணை மீன்பிடிப்புத் தொழில் தனியார்வசம் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதால் கடந்த ஒருவாரமாக மீன்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் 2 டன் அளவிலான மீன்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் 230 மீனவர்களுக்கு மீன்பிடிப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பரிசலுக்கு இருவர் வீதம் சென்று வலை விரித்து மறுநாள் வலையில் சிக்கிய மீன்களை கரைக்குக் கொண்டு வருவர். பிடிபடும் மீன்களை மீன்வளத் துறையும், மீனவர்களும் சரி பாதியாகப் பகிர்ந்து கொள்வர்.
மீன்வளத்துறை சார்பில் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும். மீனவர்கள் தனியே விலை நிர்ணயித்து விற்பனை செய்து கொள்வர். தினமும் சராசரியாக 2 டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
இந்த மீன்களை உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, கம்பம், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்கிச் செல்வர்.
இந்நிலையில், மீன்பிடி தொழில் தனியார் மூலம் நடத்த அரசு முடிவு செய்தது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் மீன்பிடி உரிமை தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான ஆவணப் பரிவர்த்தனை தற்போது நடந்து வருகிறது.
இதனால், அரசு மூலம் நடந்து வந்த மீன்பிடித் தொழில் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீன் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், எங்களின் எதிர்ப்பை மீறி மீன்பிடிப்பு தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு சார்பில் விடப்பட்ட குஞ்சுகளே வளர்ந்துள்ளன. ஏனோ கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்க எங்களை அனுமதிக்கவில்லை.
தனியார் மூலம் மீன்பிடித் தொழில் நடந்தாலும் எங்கள் தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மீன்வளத் துறை நேரடியாகச் செயல்படாமல் கண்காணிப்புப் பணியில் மட்டும் ஈடுபடும், என்றனர்.
- என்.கணேஷ்ராஜ்