

திருவாரூர்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை: வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 தொகுதிகளில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று அரசுத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் 316 பயனாளிகளுக்கு ரூ.4.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், 25 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1.82 கோடி கடன் உதவியையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 தொகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் உடற்கல்வி ஆசிரியர்கள் 77 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் உடற்கல்வி பாடத்தை கட்டாயம் ஆக்குவது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் அர.சக்கரபாணி, சிவ.வீ.மெய்யநாதன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தாட்கோதலைவர் மதிவாணன், எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி.ராஜா, மாரிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர், நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் உள்ளிட்டோர் சிலைகளுக்கு அமைச்சர் உதயநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள பார்வையாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
மொழிகள் ஆய்வகம் திறப்பு: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், தமிழகத்தில் முதல் முறையாக மொழிகள் ஆய்வக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வரவேற்றார்.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, மொழிகள் ஆய்வகத்தை திறந்து வைத்துப் பேசியது: அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும் என்ற நோக்கில்தான் மொழிகள் ஆய்வகத் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியுள்ளார்.
மேலை நாடுகள், தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்த இந்த வசதி தற்போது அரசுப் பள்ளியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் நன்றி கூறினார். விழாவில், எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன், எஸ்.ராஜகுமார், எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.