Published : 16 Mar 2023 06:19 AM
Last Updated : 16 Mar 2023 06:19 AM
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற 25 வயதான பெண் யானை உள்ளது. கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சுவாமி வீதியுலா நேரத்தில் நடைபெறும் ஊர்வலங்கள், சடங்குகளில் இந்த யானை பங்கேற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக யானைக்கு மரு மற்றும் பூஞ்சை போன்ற தோல் சம்பந்தப்பட்ட பாதிப்பு உடலிலும், கால் நகங்களிலும் ஏற்பட்டுள்ளது.
கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், அறங்காவலர் செந்தில்முருகன் முன்னிலையில், கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் (மதுரை), வினோத்குமார் (திருச்செந்தூர்), பணி ஓய்வுபெற்ற தேனி கால்நடை உதவி இயக்குநர் உமாகாந்தன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் யானையை நேற்று பரிசோதித்து, யானையின் உடலில் பாதிப்படைந்த பகுதிகளில் இருந்து மாதிரி சேகரித்தனர்.
பின்னர் மருத்துவ குழுவினர் கூறும்போது, “யானைக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய், வழக்கமாக யானைகளுக்கு வரக்கூடியது தான். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது. இருந்தபோதிலும் யானைக்கு நோய் மேலும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பாகங்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.
பரிசோதனை அறிக்கை வந்ததும் தேவையான சிகிச்சை வழங்கப்படும். இந்த பாதிப்புக்கு காரணம் பக்தர்கள் யானைக்கு வழங்கும் உணவு மற்றும் பழங்கள் தான். ஏனென்றால் தற்போது வரக்கூடிய பழங்கள் பூச்சிக்கொல்லி போன்ற ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த பழங்களை யானை சாப்பிடுவதால் இதுபோன்ற தோல் நோய்கள் வருகிறது. பக்தர்கள் யானைக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும்” என்றனர்.
அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் கூறும்போது, ”கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானைக்கு நேரடியாக உணவு மற்றும் பழங்கள், காய்கறிகளை வழங்க வேண்டாம். உணவு வழங்க விரும்பும் பக்தர்கள் அதனை யானை பாகனிடம் வழங்க வேண்டும். அதிலிருந்து தேவையானவை மட்டும் யானைக்கு வழங்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT