Published : 16 Mar 2023 06:02 AM
Last Updated : 16 Mar 2023 06:02 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி ஏற்கெனவே நடைமுறையில் இருந்தபடி ‘நீட்’ தேர்வு மையம் இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வாணியம்பாடி அம்பலூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோகன் என்பவர் ‘இந்து தமிழ் திசை உங்கள் குரல்' பகுதி வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறும்போது, ‘‘பிளஸ் 2 தேர்ச்சி பெறுவதோடு ‘நீட்’ தேர்வில் உரிய மதிப்பெண் எடுத்தால் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியும் என்ற நிலை தற்போது உள்ளது.இதனால், பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் தற்போது தொடங்கியுள்ள பொதுத்தேர்வுடன் சேர்த்து இந்தாண்டுக்கான நீட் தேர்வுக்கும் தங்களை தயார்படுத்தி வரு கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களும் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற நீட் தேர்வுக்கு இந்த மாவட்டத்தில் மையங்கள் அமைக்கப்பட்டன. வாணியம்பாடி அருகாமையில் உள்ள தனியார் கல்லூரி, ஏலகிரி மலையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி என 2 கல்லூரிகளில் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
கடந்தாண்டு நீட் தேர்வு வாணியம்பாடி அருகேயுள்ள மகளிர் கல்லூரியில் மட்டுமே நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இதனால், கடந் தாண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் கலந்து கொண்டனர்.
கடந்தாண்டு நடைபெற்ற தேர்வில் தோல்வியடைந்த ஆயிரம் பேர் இந்த ஆண்டு தேர்வு எழுதுவார்கள் என தெரிகிறது. 2023-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களில் பட்டியலில் திருப்பத்தூர் மாவட்டம் விடுபட்டுள்ளது மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் இடம் பெறாத பட்சத்தில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை உருவாகும். இது மாணவர்களுக்கு தேவையில்லாத அலைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் என்பதால் கடந்த ஆண்டுகளில் நடைமுறையில் இருந்தபடி திருப்பத்தூர் மாவட்டத்திலேயே நீட் தேர்வு மையத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும். அதற்கு ஆட்சியாளர்கள் தனி கவனம் செலுத்தி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பின் கனவை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.
இது குறித்து திருப்பத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் நல்லதம்பியிடம் கேட்டபோது, ‘‘திருப்பத்தூர் மாவட் டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி, பழையபடி திருப்பத்தூர் மாவட்டத்திலேயே 2 தேர்வு மையங்களை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம்.
இது தொடர்பாக உடனடியாக வேலூர் மற்றும் தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று திருப்பத்தூர் மாவட்டத்திலேயே நீட் தேர்வு மையம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT