நாடாளுமன்றம் முடக்கம் முதல் வெப்ப அலை எச்சரிக்கை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 15, 2023

நாடாளுமன்றம் முடக்கம் முதல் வெப்ப அலை எச்சரிக்கை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 15, 2023
Updated on
2 min read

மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி குழும விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் அமளி காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் புதன்கிழமையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

முன்னதாக,காலையில் இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் புகார் அளிக்கும் நோக்கில், நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சியினர் பேரணியாகச் சென்றனர். அனுமதி இன்றி பேரணியாகச் சென்றதால் எதிர்கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

“அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்க வேண்டும்” - முதல்வர்: சில திட்டங்களில், பணி நிறைவு பெறுவதில் தேக்க நிலை காணப்படுவதாகவும், அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்கவேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வெப்ப அலையை எதிர்கொள்ள அரசு அலர்ட்: வெப்ப அலையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் செயல் திட்டங்களை தயார் செய்ய வேண்டும் என்று துணை இயக்குநர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதலில் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களாக, அதிக நீர் அருந்த வேண்டும். முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும். பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை சூரிய வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். சூடு, தோலில் எரிச்சல், ஏற்பட்டால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஹெச்3என்2 பாதிப்பு: அமைச்சர் விளக்கம்: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு ஹெச்3என்2 பாதிப்பு இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தில் அந்த அளவு தீவிரம் இல்லை. பெரிய பாதிப்பும் இல்லை. தேவை இல்லாமல் பதற்றத்தை நாமே உருவாக்க வேண்டாம்" எனறார்.

இதற்கிடையில், வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை நாளை முதல் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் திருவிழா குறித்து ஐகோர்ட் அறிவுரை: பொதுத் தேர்வு நேரத்தில், கோயில் திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியர்: ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றதை அடுத்து, யானைகளை பராமரிக்கும் பொம்மன் - பெள்ளி தம்பதியர் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இவர்கள், "இரண்டு யானை குட்டிகளை வளர்த்து கொடுத்துள்ளோம். முதுமலை வனத்துறைக்கே இது மிகப்பெரிய பெருமை. ஆவண படத்தில் நடித்தது முதல்வர் வரை வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. யானை வளர்ப்பு சாதாரண விஷயம் இல்லை. யானை வழித்தட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஊர் மக்கள் தவிர்க்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதைக் கேட்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்" என்றனர்.

இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள 2 யானைகள் முகாமில் பணியாற்றும் 91 பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நத்தம் நிலத்தில் வசித்தோரை காலி செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து: மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் ஆதிதிராவிடர் நத்தம் நிலத்தில் வசித்தவர்களை ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ், காலி செய்யும்படி தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் நடைபயணத்துக்கு அனுமதி மறுப்பு: வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபயணம் நடத்த அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மாசடைந்த நாடுகளின் பட்டியல் இந்தியாவுக்கு 8-வது இடம்: ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த IQAIR என்ற நிறுவனம் உலக நாடுகளின் காற்று தரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுமார் 131 நாடுகளில் உள்ள 7,300 நகரங்களில் நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி “2022 -ல் உலகில் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8-ஆம் இடம் பிடித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா ஐந்தாமிடத்தில் இருந்தது. மேலும் உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக். போலீஸ் மீது இம்ரான் கான் குற்றச்சாட்டு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நான் இந்த நாட்டு மக்களுக்கு ஒன்றைக் கூறி கொள்கிறேன். அவர்கள் மீண்டும் என்னை நோக்கி வருவார்கள், அவர்கள் எங்கள் மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவார்கள் , பிற பொருட்களை கொண்டு தாக்குவார்கள்... ஆனால், அவ்வாறு செய்வதற்கு அவர்களிடம் எந்த நியாயமும் இல்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். என்னைக் கடத்தி படுகொலை செய்வதே பாகிஸ்தான் போலீஸின் நோக்கம்” என்று தெரிவித்திருந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in