

மதுரை: தமிழரின் பெருமைகளை அறிய கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என, மதுரையில் இளம் தமிழர் இலக்கியப் பயிற்சி பட்டறை தொடக்க விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 7 நாள் இளம் தமிழர் இலக்கியப் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள் வரவேற்றார். தமிழக தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயிற்சியை தொடங்கி வைத்து பேசியது: “மொழியின் சிறப்பாக இருக்கவேண்டிய இடம் மதுரை மூதூர் என்றும் தென்பாண்டித் தமிழ் என்றும் அழைக்கப்படும் மதுரை மாநகராகும். இறையனார் தமிழ் வளர்த்த இடம் மதுரை தமிழ்கெழு கூடல் - கூடல்மாநகர் என்று 2600 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியத்தில் உள்ளது. இங்கே வந்திருக்கும் 38 மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் இங்கே கூடுவதும் நான்மாடக் கூடல்தான். எதிர்காலத்தில் மொழியின் சிறப்பு, பாதுகாப்பு பற்றி எடுத்துச் செல்லக்கூடிய இடம்தான் இது.
அறிவு, ஆற்றல் இவை பற்றி அறிந்து கொள்ளக்கூடியதும் கற்றுக்கொள்ள வேண்டியதும் இப்பயிற்சிப் பட்டறையாகும். இலக்கியப்பயிற்சிக்கு இலக்கணம், இலக்கியம், காப்பியம் ஆகியவற்றை எதிர்காலத்தின் தேவைக்கேற்ப அறிந்து கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இலக்கியம் படித்தாலும், அடுத்தகட்டத்திற்கு இப்பயிற்சி பட்டறை உங்களை நகர்த்திச் செல்லும். பல்வேறு துறை சார்ந்த ஆற்றலாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். சிறந்த பேச்சாளர்களான இவர்களிடம் கற்றுக் கொண்டு தங்களை உயர்த்திக் கொள்ளுங்கள். இம்முகாமில் 35 தலைப்புகளில் பயிற்சி பெற்றாலும், நீங்கள் பேசும் அமர்வாக இருக்கவேண்டும்.
சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் தற்பொழுது பாண்டிய நாட்டில் வழக்கத்தில் உள்ளன. சேர, சோழ, பாண்டியர்கள் என்று நிலங்களாகப் பிரிந்து இருந்தாலும், மொழியால்தான் நாம் இணைந்திருக்கிறோம். சமணர் குகைகள், நெடுஞ்செழியன் குகைகள், கீழடியில் வெட்டப்பட்ட குழிகள் ஆகியவை தமிழின் தொன்மைக்குச் சான்றாகும். கீழடி நாகரிகம் பற்றிய அருங்காட்சியகத்தை அனைவரும் சென்று கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதன்மூலம் தமிழரின் பெருமை அறிய, தெரிந்துகொள்ள முடியும். முதல்வரின் முயற்சியால் அருங்காட்சியகம் மூலம் தொல் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளோம்.
தெற்காசியவின் மிகப் பெரிய நூலகமாக மதுரையில் கலைஞர் நூலகம் விரைவில் திறக்கப்படவுள்ளது. மேலும், இப்பகுதி இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியிலும் பயன்பெற வேண்டும் என ரூ.600 கோடியில் டைட்டல் பார்க் அமைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் மதுரை முன்மாதிரியாக உருவாக்கப்படும்” என்று அமைச்சர் பேசினார்.
மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமை வகித்து பேசினார். எம்எல்ஏகள் பூமிநாதன், கோ. தளபதி, துணை மேயர் நாகராஜன், பயிற்சி ஆட்சியர் திவ்யான்சு நிகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.