

மதுரை: திண்டுக்கல் மாநகராட்சியில் 34 கடைகளின் ஏலத்துக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினர் தனபாலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள 34 கடைகள் 2022 நவ.17-ல் ஏலம் விடப்பட்டது. தமிழ்நாடு வெளிப்படையான ஏல அறிவிப்பு சட்டத்தின் கீழ் ஏல அறிவிப்புகளை உள்ளூர் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு ஏலம் வழங்க வேண்டும் என்பது விதியாகும். இந்த விதியை அதிகாரிகள் பின்பற்றவில்லை. இதனால் 34 கடைகள் ஏல ஓதுக்கீட்டை ரத்து செய்து, விதிப்படி அறிவிப்பு வெளியிட்டு ஏலம் விட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி ஆகியோர் விசாரித்து, ‘திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 34 கடைகள் ஏலம் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை. இந்த முறைகேடு உறுதியானால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்.
ஏலம் விடப்பட்ட 34 கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். இதுதொடர்பாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மார்ச் 23ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.