

புதுச்சேரி: புதுச்சேரியில் குரூப் ‘பி’ பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்பிசி) இட ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்தவுடன் அமைச்சர் தேனீஜெயக்குமார் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன் விவரம்: “குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது. முதல்வர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார்” என்றார்.
அப்போது எதிர்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், செந்தில்குமார் ஆகியோர் இடஒதுக்கீட்டில் சில சந்தேகங்களை எழுப்பினர். அதற்கு அமைச்சர் தேனீஜெயக்குமார், “அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசாணை நகல் வழங்கப்படும்” என்றார்.
முன்னதாக கேள்வி நேரத்தின்போது திமுக எம்எல்ஏ கென்னடி, “அரசிதழில் பதிவு பெறாத குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் முன்பாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்படுமா?” என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தேனீஜெயக்குமார், ”குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட அனைத்து உட்பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாணை இன்று வெளியிடப்படும்” என குறிப்பிட்டிருந்தார். அதன்படி இந்த அறிவிப்பு வெளியானது.
அறிவிப்பு விவரம்: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) இட ஒதுக்கீட்டின் அளவு மொத்தமாக 27%-ல்ருந்து 33% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (எம்பிசி) துணைப்பிரிவு அறிவிக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் முறையே 60:40 இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டுப் பலன்களை புதுச்சேரியில் உள்ள குரூப் 'பி' பதவிகளுக்கும் நீட்டிக்க ஒருமனதாகப் பரிந்துரைத்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 6-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் போது, பல குரூப் 'சி' பதவிகள் குரூப் 'பி' ( அரசிதழ் அல்லாத ) பதவிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இடஒதுக்கீட்டு சலுகைகளை தர உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, புதுவையில் பி பிரிவு பணிகளுக்கு இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டிருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். அதன் விவரம்: புதுவையில் பி பிரிவு பணிகளுக்கு இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டிருப்பது பாமகவிற்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்