மின்வாரிய வலைதளங்களை கையாளும் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்க முடிவு

மின்வாரிய வலைதளங்களை கையாளும் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்க முடிவு
Updated on
1 min read

சென்னை: முகநூல், ட்விட்டர், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் தமிழ்நாடு மின்வாரியம் ‘TANGEDCO Official’ என்ற பெயரில் அதிகாரப்பூர்வ கணக்குகளை வைத்துள்ளது.

இந்த வலைதளங்கள் மூலமாக, கூடுதல் மின்கட்டண வசூல், சேதமடைந்த மின்சாதனங்களை மாற்றுதல் உள்ளிட்டவை குறித்து மின்நுகர்வோர் புகார் அளித்து வருகின்றனர். இந்த புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்த்து வைக்கின்றனர்.

இந்த சமூக வலைதள கணக்குகளை மின்வாரிய பொறியாளர்களே தற்போது கையாள்கின்றனர். அதுவும், அலுவலக நேரத்தில் மட்டுமே இந்த கணக்குகள் கையாளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் இந்த கணக்குகள் கவனிக்கப்படுவது இல்லை. இதனால், அலுவலக நேரம் கடந்து தெரிவிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

தவிர, இந்த வலைதளங்களில் பதிவு செய்யப்படும் தகவல்கள், முக்கிய விவரங்கள் ஆகியவை மின்நுகர்வோரை ஈர்க்கும் வகையில் இல்லை. தற்போது 1 கோடிக்கும் மேற்பட்டோர் மின்னணு முறையில் மின்கட்டணம் செலுத்திவரும் நிலையிலும், ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்களே மின்வாரியத்தின் சமூக வலைதளங்களை பின்தொடர்கின்றனர்.

வலைதள கணக்கு கண்காணிப்பு: இதனால், மின்வாரியத்தின் சமூக வலைதளங்களை கையாளும் பணியை தனியார் நிறுவனத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், விடுமுறை நாட்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் மின்வாரியத்தின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்படும்.

நுகர்வோர் தெரிவிக்கும் புகார்கள் உடனுக்குடன் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in