

சென்னை: ‘தி.மு.க. ஆட்சி மீது கை வைத்தால், தமிழகத்தில், பாஜகவினர் உயிரோடு இருக்க முடியாது’ என, பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும்’ என பாஜக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக வழக்கறிஞர் அணியின் துணை தலைவராக இருப்பவர் மணி. இவர், டிஜிபி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். அப்போது அவர், ‘திமுக வை மிரட்டுவது போல, பாஜகமாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார்.
தமிழக அரசியலை, இவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வேறுவிதமாக நடத்த பார்க்கின்றனர். திமுகஆட்சி மீது கை வைத்தால், தமிழகத்தில் பாஜகவினர் உயிரோடு இருக்க முடியாது’ என பேசியுள்ளார்.
இவர் மிரட்டல் விடுப்பது, ஆபாசமாக பேசுவது, ஆணவமாக நடந்து கொள்வதை வாடிக்கையாக செய்து வருகிறார். இவர், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்கிறார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து, அதன் வாயிலாக ஆதாயம் தேட முயல்கிறார். எனவே, இவர் மீது கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி மீது சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவிலும் இதே புகாரை தமிழக பாஜக வழக்கறிஞர் அணி துணை தலைவர் மணி அளித்துள்ளார்.