Published : 08 Sep 2017 07:22 PM
Last Updated : 08 Sep 2017 07:22 PM

15 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம்: அரசு மருத்துவர் உட்பட 4 பேர் மீது திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு

கோயம்பேட்டிலிருந்து இருந்து 15 வயது சிறுமியை ஆரணிக்கு கடத்திச் சென்று வீட்டில் சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதை செய்ததாக அரசு டாக்டர் உள்பட 4 பேர் மீது சென்னை, திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வங்கி ஒன்றில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் லட்சுமி(45)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் ஆறுமுகம் இரண்டு வருடங்களுக்கு முன் மரணமடைந்துவிட்டார். லட்சுமிக்கு 15 வயதில் மகளும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மூத்த மகள் லட்சுமிக்கு உதவியாக உள்ள நிலையில் இளைய மகளை அருகில் உள்ள விடுதியில் சேர்த்து படிக்க வைக்கிறார். இந்நிலையில் மூத்த மகள் திடீரென காணாமல் போய் விட்டார். மகள் காணாமல் போனது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் அலட்சியப்படுத்தவே எதுவும் புரியாமல் லட்சுமி வேதனைப்பட்டார்.

இந்நிலையில் ஒரு மாதம் கழித்து லட்சுமிக்கு தெரிந்த குமார் என்பவர் மகளை அழைத்து வந்து லட்சுமியிடம் ஒப்படைத்துள்ளார். அலங்கோலமான நிலையில் இருந்த மகளிடம் விசாரித்ததில் முதலில் தயங்கியவர் பின்னர் கூறிய தகவல் லட்சுமிக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தனது மகள் கூறிய தகவல்களை புகாராக எழுதி லட்சுமி சென்னை காவல் ஆணையரிடம் புகாராக கொடுத்துள்ளார்.

புகாரில் லட்சுமி கூறியிருப்பதாவது:

தனக்குத் தெரிந்த சித்ரா என்பவர் ஜவுளிக்கடையில் வேலை வாங்கித் தருகிறேன் என்று சுரேஷ் என்பவரை அனுப்பி தனது மகளை ஆரணிக்கு அழைத்துச்சென்று அங்கு சித்ரா வீட்டில் தங்க வைத்ததாகவும், சித்ரா வீட்டில் அவரது மகளுக்கு மயக்க ஊசி போட்டு சுரேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் ஆரணியில் உள்ள அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் என்பவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சுரேஷுக்கு நெருக்கமான கோட்டீஸ்வரி என்பவர் மூலமும் தனது மகளின் வாழ்வு சீரழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது மகளின் வாழ்க்கையை சீரழித்த அரசு டாக்டர் உள்ளிட்டவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கும்பலால் தனது மகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

புகார் உடனடியாக சம்பந்தப்பட்ட அண்ணா நகர் துணை ஆணையர் சுதாருக்கு அனுப்பப்பட சுதாகர் உத்தரவின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மல்லிகா உடனடியாக சுரேஷ், சித்ரா, அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ், கோட்டீஸ்வரி ஆகியோர் மீது பிரிவு 366A, ipc r/w 6 of பாஸ்கோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சிறுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் பிறகு ஆரணிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x