Published : 15 Mar 2023 06:18 AM
Last Updated : 15 Mar 2023 06:18 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இறையூர் மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். எனினும், இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை.
இந்நிலையில், வேங்கைவயல் அருகே உள்ள இறையூரைச் சேர்ந்த 3 சிறுவர்கள்தான் தொட்டியில் மனிதக் கழிவை கலந்ததாக ஒரு அமைப்பு இரு தினங்களுக்கு முன்பு துண்டறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இறையூர் பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘‘குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தவர்களை கைது செய்ய வேண்டும். எவ்வித ஆதாரமும் இல்லாமல் சிறுவர்கள் மீது குற்றம் சுமத்தி துண்டறிக்கை வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும். வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இங்கு வந்து, இச்சம்பவத்தை திசை திருப்பும் வகையில் செயல்பட்டு வருவதால் உள்ளூர் மக்களிடையே குழப்பமான சூழல் நிலவி வருகிறது. எனவே, இப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.
இதனால் பதற்றமான சூழல் நிலவியதால் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவை மூடி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், கோரிக்கை மனுவை ஆட்சியர் கவிதா ராமுவிடம் பொதுமக்கள் அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார். அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT