Published : 15 Mar 2023 06:03 AM
Last Updated : 15 Mar 2023 06:03 AM

தென்காசி | 10 ஆயிரம் கி.மீ. கிராமச் சாலைகளை இணைக்க ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமன மையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று பார்வையிட்டார் . உடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் .

தென்காசி/ திருநெல்வேலி/ நாகர்கோவில்: தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெற்கட்டும்செவலில் உள்ள மாவீரன் பூலித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகள், மாவீரன் பூலித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.70 லட்சம் மதிப்பில் மாணவியர் கழிப்பறை கட்டும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் புன்னையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.84 லட்சம் மதிப்பில் 5 வகுப்பறைகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர், தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார். கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி, நயினாரகரம், தென்காசி ஒன்றியம் குத்துக்கல்வலசை, சுமைதீர்ந்த புரம் உட்பட 10 ஊராட்சிகளுக்கு ரூ.45.20 லட்சம் மதிப்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிராக்டர்களை வழங்கினார்.

ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கூறும்போது, “தமிழக முதல்வர் முதல் முறையாக இந்த ஆண்டில் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கி.மீ. கிராம சாலைகளை இணைக்க ரூ.4000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்கவும், காற்றோட்டத்துடன் விசாலமான வகுப்பறை கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வளர்ச்சி பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தி வருகிறார்.

பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் அத்தியாவசியப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொறி யாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

ஆய்வின்போது தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பழநி, ஈ.ராஜா, தி.சதன் திருமலைக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மற்றும் நாங்குநேரி வட்டாரங்களில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, “திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி 60 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் மற்றும் லீபுரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள், கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட ஒற்றையால் விளை பள்ளி புதிய வகுப்பறை கட்டுமானப் பணி ஆகியவற்றை நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டார்.

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x