புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் | ''பூர்வாங்கப் பணிகளை தொடங்கிவிட்டோம்'': அமைச்சர்

அமைச்சர் லட்சுமி நாராயணன் | கோப்புப் படம்
அமைச்சர் லட்சுமி நாராயணன் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக தேவைப்படும் ரூ.425 கோடியை சிறப்பு நிதி உதவியாக வழங்குமாறு மத்திய அரசை, புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக எம்எல்ஏக்கள் சிவா, வெங்கடேசன், சிவசங்கர், அசோக்பாபு ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் லட்சுமி நாராயணன், ''புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய விமான ஆணையம் தயாரித்துள்ளது. புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் தேவையான நிலம் கையகப்படுத்த சுமார் ரூ. 425 கோடி தேவைப்படும். நிலம் கையகப்படுத்த சிறப்பு நிதியுதவியை வழங்க மத்திய அரசுக்கு 4 முறை கடிதம் அனுப்பியுள்ளோம். ஒரு முறை நேரில் சென்று தெரிவித்தோம்.

விமான நிலைய விரிவாக்கத்திற்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கிவிட்டோம். மத்திய அரசு பணம் தர வேண்டும். தமிழகத்தில் 273 ஏக்கரும், புதுச்சேரியில் 20 ஏக்கரும் தேவை. நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு விரிவாக்கப் பணிகள் இரண்டு நிலைகளில் நடக்கும். விமான நிலைய விரிவாக்கத்துக்கு அடையாளம் காணப்பட்ட இடத்தில் பத்திரப்பதிவு நடக்காது. தமிழகப் பகுதியில் நிலம் காலியாக உள்ளது. புதுச்சேரியில் 20 ஏக்கர் இடத்தில்தான் குடியிருப்புகள் உள்ளன. கட்டிடங்கள் இருந்தாலும் அதை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கான தொகை முடிவு செய்யப்படும். விமான நிலையம் இருந்தால்தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கையகப்படுத்தும் இடத்துக்கு தற்போதைய சந்தை விலையில் இழப்பீடு வழங்கப்படும்'' என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in