தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியது

பிளஸ் 1 தேர்வு | கோப்புப் படம்
பிளஸ் 1 தேர்வு | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில், இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7.93 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 13) தொடங்கி ஏப்.3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 14) தொடங்கி ஏப்.5-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 3,224 மையங்களில் 7.93 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

முதல் நாளான இன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43,200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 281 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்துவசதிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்: தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற சாதனங்களை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்வது, விடைத்தாளை மாற்றிக் கொள்வது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

கட்டுப்பாட்டு அறை: பொதுத் தேர்வுகளை முன்னிட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்புக் கொள்ளலாம். மாணவர்கள், 9498383081, 9498383075 எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in