Published : 11 Sep 2017 07:23 PM
Last Updated : 11 Sep 2017 07:23 PM

அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட இடைக்காலத் தடை: பெங்களூரு உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட இடைக்காலத் தடை விதித்து பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக அம்மா அணியின் கர்நாடக செயலாளர் புகழேந்தி பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ''பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவுக்கும், துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரனுக்கும் மட்டுமே அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் உள்ளது. ஆனால், அவர்கள் பொதுக்குழுவுக்கோ, செயற்குழுவுக்கோ யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 12-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகியோரின் அனுமதியின்றி இக்கூட்டத்தைக் கூட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.எனவே, பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டது.

இந்நிலையில் இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘’அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 13-ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும்’’ என்று உத்தரவிட்டார்.

நாளை (செப்டம்பர் 12-ம் தேதி) ஈபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட இருந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட இடைக்கால தடை விதித்திருப்பது குறிப்பிடத்தகக்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x