

திருச்சி: விளையாட்டு நகரம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக இளைஞரணிச் செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
விமானநிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் விமானநிலைய வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: வரும் பட்ஜெட்டில் அறிவிக்கக் கோரி விளையாட்டுத்துறை தொடர்பாக நிறைய கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளோம். விளையாட்டு நகரம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளேன்.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இறுதிப் போட்டிகள் முடிந்ததும், வெற்றி பெற்ற அனைவருக்கும் சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குவார் என்றார்.