உலகமே ஒரு குடும்பம் என்ற கோட்பாட்டை பின்பற்றினால் மக்கள் தேவையை நிறைவு செய்ய முடியும்: பொருளாதார ஆலோசகர் கருத்து

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசுகிறார் மத்திய அரசின் தலைமை  பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன். உடன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.வைத்யசுப்பிரமணியம், சிட்டி யூனியன் வங்கி  நிர்வாக இயக்குநர் என்.காமகோடி ஆகியோர்.படம்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசுகிறார் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன். உடன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.வைத்யசுப்பிரமணியம், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் என்.காமகோடி ஆகியோர்.படம்: ஆர்.வெங்கடேஷ்
Updated on
1 min read

தஞ்சாவூர்: வசுதெய்வ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொண்டால், மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 17-வது சிட்டி யூனியன் வங்கி வி.நாராயணன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் ‘வசுதெய்வ குடும்பத்தில் பொருளாதார சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

வளர்ந்த நாடுகளை விட வளரும் தென் பகுதி நாடுகளில் பசுமைக்குடில் வாயு வெளியாக்கம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, கடந்த 1850 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய பசுமைக்குடில் வாயு வெளியாக்கத்தில் இந்தியாவின் பங்கு 4 சதவீதம் மட்டுமே உள்ளது.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு, வளர்ந்த நாடுகள் அளிக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான பொறுப்பு, வளரும் நாடுகளிடம் முதன்மையானதாக இருக்க வேண்டும். வசுதெய்வ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என்கிற சொற்றொடர் எல்லைக் கடந்த மனித நேயத்தைக் கொண்டாடுகிறது. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் உலக பொருளாதாரத்தை எதிர்கொண்டால், அனைத்து மக்களின் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும். ஆனால், உண்மை நிலை வேறு விதமாக இருக்கிறது.

கடந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய சமத்துவமின்மையால் நாம் பின்தங்கியிருப்பதாக உலக சமத்துவமின்மை அறிக்கை 2022-ல் தெரிவிக்கிறது. உலக மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் கிட்டத்தட்ட 2 சதவீத உலக உற்பத்தியை மட்டுமே பெறுகின்றனர்.

வளரும் நாடுகளில் புவி வெப்பமயமாதலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, சமத்துவமின்மை மேலும் அதிகரிக்கிறது. இந்தியா தனது விழுமியங்களை மீண்டும் கண்டறிந்து, அதை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in