

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போலுப்பள்ளியில் 46.03 ஏக்கர் பரப்பளவில் ரூ.338.95 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி 1,500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சைப் பிரிவு: மருத்துவமனை 6 தளங்களில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுக்கு வந்து செல்வோரின் பயன்பாட்டுக்காகக் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகியுள்ளது. இதனால், பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேவை அதிகரிப்பு: இதுதொடர்பாக நோயாளிகள் சிலர் கூறியதாவது: மருத்துவமனையில் அமைக்கப் பட்டுள்ள 10 சுத்திகரிப்பு இயந்திரங்களிலும் குடிநீர் வருவதில்லை. இதனால், வெளியே சென்று தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையுள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குடிநீர்த் தேவை அதிகரித்துள்ளது.
எனவே, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரப் பழுதை சரி செய்து, நோயாளிகளுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினசரி 10 ஆயிரம் லிட்டர்: இதுதொடர்பாக அரசு மருத்துவமனை அலுவலர்கள் கூறியதாவது: மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களில் ஆழ்துளைக் கிணற்று நீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இயந்திரங்களில் உப்பு அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி பழுதாகிறது. எனவே, தினமும் 10 ஆயிரம் லிட்டர் பயன்படுத்தும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக குடிநீர் வாரியத்துக்கு ரூ.25 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பணிக்காகத் தேசிய நெடுஞ்சாலையோரம் 1 கிமீ தூரம் குழாய் பதிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ரூ.9.86 கோடியில் கருத்துரு: மேலும், மருத்துவமனையின் பிற பயன்பாட்டுக்கு தென்பெண்ணை ஆற்று நீரை பயன்படுத்த நீரேற்று மையம் அமைக்க ரூ.9.86 கோடி மதிப்பில் கருத்துரு அரசுக்கும் அனுப்பியுள்ளோம். இத்திட்டப் பணிகள் செயல்பாட்டுக்கு வந்தால், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.