

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கை அமலில் இருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் இந்தியை ஒரு பாடமாக வைப்பது ஏன்? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவிடக்கோரி குமரி மகா சபை செயலாளர் ஜெயகுமார் தாமஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 1986-ம் ஆண்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்கின. இந்த பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வில்லை. எனவே, நவோதயா பள்ளிகளை தொடங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, “தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளே தமிழகத்தில் கற்பித்தல் மொழியாக உள்ளன. நவோதயா பள்ளிகளில் 8-ம் வகுப்புக்கு பிறகு ஆங்கிலம் அல்லது இந்தியே கற்பித்தல் மொழியாக உள்ளது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தனியார் பள்ளிகளில் இந்தியை பாடமாக வைப்பது ஏன்? வசதி படைத்தவர்களின் குழந்தை கள் தனியார் பள்ளிகளில் கூடுத லாக கட்டணம் செலுத்தி இந்தி படித்து முன்னேறும் நிலையில், அந்த வாய்ப்பு கிடைக்காத ஏழை மாணவர்களின் நிலை என்ன வாகும்?” என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து வாதிட்ட அரசு வழக்கறிஞர், “மாநில அரசு பாடத் திட்டத்தை கற்பிக்கும் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகிறது” என்றார். பின்னர், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.