Published : 14 Mar 2023 06:23 AM
Last Updated : 14 Mar 2023 06:23 AM

நாமக்கல் | பரமத்திவேலூர் அருகே பெண் மர்ம மரணம்: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட கரப்பாளையம் கிராம மக்களிடம் எஸ்பி ச.கலைச்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தைச் சேர்ந்த விவசாயி விவேகானந்தன். மனைவி நித்யா (27) இவர் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டின் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், நாமக்கல் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் நித்யாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களைச் சமாதானம் செய்து போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். ஆனால், நித்யாவின் உடலை வாங்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலை நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரளாக வந்த கரப்பாளையம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, “நித்யா கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்தவர்களைக் கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம்” என்றனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற எஸ்பி கலைச்செல்வன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ஆனாலும், கிராம மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில், 4 மணி நேரத்துக்குப் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால், நித்யாவின் உடலை நேற்று இரவு வரை வாங்கவில்லை. இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் பாதுகாப்புப் பணிக்காக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சிறுவன் கைது: “பெண் மர்ம மரணம் வழக்கில் தமிழக சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் வடமாநிலத் தொழிலாளர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x