

தருமபுரி: ஆஸ்கர் விருது பெற்ற இந்திய குறும்படத்தில் இடம்பெற்ற நீலகிரி மாவட்ட யானைப் பாகன், மாரண்டஅள்ளியில் தாயை இழந்து தவிக்கும் யானைக் குட்டிகளை கண்காணித்து வருகிறார்.
நீலகிரி மாவட்டம் முதுமலைப் பகுதியைச் சேர்ந்தவர் பொம்மன் (52). பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான இவர் வனத்துறையில் 1984-ம் ஆண்டு முதல் யானைப் பாகனாக பணியாற்றி வருகிறார். வனத்துறை வழிகாட்டுதல்படி முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் யானைகள் பராமரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
முதுமலை முகாமிற்கு வரும் யானை குட்டிகள், உடல் நலம் பாதித்த யானைகள் என பலதரப்பட்ட யானைகளை பராமரித்த நீண்ட அனுபவம் மிக்கவர் பொம்மன். இவரது தந்தை, தாத்தா ஆகியோரும் யானைப் பாகன்கள் தான்.
யானை பராமரிப்பில் சுமார் 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் பொம்மன் சில முறை யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது மனைவி பெள்ளியும் யானைகள் பராமரிப்பில் பொம்மனுடன் தொடர்ந்து பயணிப்பவர்.
யானைகளுடனான தங்களின் அனுபவங்களை இந்த தம்பதியர் பகிர்ந்து கொள்ளும் வகையில் கார்த்திகி என்ற குறும்பட இயக்குநர், ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த குறும்படம் தற்போது ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.
இதற்கிடையில், கடந்த வாரத்தில் தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே மின் விபத்தில் 3 யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் தாய் யானைகளை இழந்த 2 குட்டி யானைகள் தவித்து வருகின்றன. அந்த யானைகளை வனத்தில் யானைகளுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பணியில் உதவிட, முதுமலையில் இருந்து வனத்துறைக்கான கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் 3 யானைப் பாகன்கள் உட்பட 6 பேர் அடங்கிய குழுவினர் மாரண்ட அள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த 3 பாகன்களில் ஒருவர் பொம்மன்.
அவரை நேரில் சந்தித்து பேசியபோது, ‘யானைகளுடனான எங்கள் வாழ்வு குறித்த தகவலை கேட்டறிந்து கார்த்திகி குறும்பட மாக எடுத்தார். அந்த படம் தற்போது விருது பெற்றிருப்பதாக கூறினார்கள். இந்த படம் மூலம் இந்திய நாட்டுக்கே பெருமை ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். அதைக் கேட்டபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
யானைகளை வளர்க்கும் முறை, பராமரிக்கும் முறை உள்ளிட்டவற்றை குறும்பட இயக்குநரிடம் பேசினேன். அதை பதிவு செய்து அவர் படமாக கொண்டு வந்து விட்டார்’ என்றார். தொடர்ந்து தாய் யானைகளை பிரிந்த குட்டிகளை கண்காணிக்கும் பணிக்காக வனத்துறை அதிகாரி களுடன் வனத்துக்குள் சென்றார் பொம்மன்.