

சென்னை: சுங்க கட்டண உயர்வை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல்1-ம் தேதி முதல் சுங்க கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்கள் விலைவாசி உயர்வு, வேலையின்மை என பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சுங்க கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சுங்க கட்டணம் வணிகர்கள், வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
காலாவதியான சுங்கச்சாவடிகள்: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்நிலையில், இவற்றை அகற்ற தமிழக அரசின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. எனவே, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் காலவதியாகியுள்ள 32 சுங்கச் சாவடிகள், 60 கிமீ தூரத்துக்கு குறைவாக இருக்கும் சுங்க சாவடிகள், நகர்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்றவேண்டும். இவ்வாறு அறிக்கையில் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.