

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆலோடு பகுதியில், உறவினர்களுக்கிடையே வீட்டை காலி செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் பொன்னேரி 17-வதுவார்டு கவுன்சிலர் இளங்கோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலையிட்டுள்ளனர்.
இதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக இருந்த இளங்கோவின் ஆதரவாளர்கள், எதிர் தரப்பை சேர்ந்தபாலமுருகன் என்பவரை கற்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களதுமுழு நேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பொன்னேரி 17-வது வார்டு கவுன்சிலர் இளங்கோ, ஒரு குடும்ப பிரச்சினையில் தலையிட்டு, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் திமுக கவுன்சிலர், இதில் ஈடுபட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்ககாவல்துறையினர் மறுத்திருக்கின்றனர்.
காவல்துறையினரின் அலட்சியமும் திமுக கவுன்சிலரின் வன்முறை வெறியாட்டமும் கொலையில் முடிந்திருக்கிறது. இதையெல்லாம் இன்னும் எத்தனை நாள் கண்டும் காணாமல் முதல்வர்மு.க.ஸ்டாலின் மவுனமாக இருப்பார்?.