Published : 14 Mar 2023 06:41 AM
Last Updated : 14 Mar 2023 06:41 AM

உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உதவும் நிறுவனம்: தேர்வுக்கான ஒப்பந்தத்தை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், அந்நிய முதலீடுகள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தை முதலீட்டுக்கான உகந்த மாநிலமாக மாற்றும் நடவடிக்கையாக, ஒற்றைச்சாளர முறை அனுமதி, நில வங்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு முதலீட்டாளர்களை ஒரே இடத்தில் வரவழைத்து அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, கடந்த அதிமுக ஆட்சியில் 2 உலக முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அதன்வாயிலாக, 2015-ம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்பிறகு 2019-ல் நடைபெற்ற 2-வது மாநாட்டில் ரூ.3லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகளுக்கு 304 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போதைய திமுக ஆட்சியில், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பயணம், தொடர்ந்து அமைச்சர்களின் பயணங்கள் மூலம் அவ்வபோது முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், இந்த 2023-ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

100-க்கும் மேற்பட்ட நாடுகள்: தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் வரும் 2024-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

மாநாட்டுக்கான வடிவமைப்பு: முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தொழில்துறையின் கீழ் செயல்படும் வழிகாட்டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 2024-ல்நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான புத்தாக்க வடிவமைப்பு, இணையதள உருவாக்கம் மற்றும் மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடக மேலாண்மை ஆகியவற்றுக்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இணையதளம் மூலம் ஒப்பந்தப் புள்ளிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x