Published : 03 Sep 2017 11:05 AM
Last Updated : 03 Sep 2017 11:05 AM

தேசிய அளவிலான நதிகள் பாதுகாப்பு பிரச்சார பயணம் கோவையில் இன்று தொடக்கம்: கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்கிறார்

‘நதிகளை மீட்போம்’ இயக்கம் சார்பில் தேசிய அளவிலான நதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் கோவையில் இன்று (செப். 3) தொடங்குகிறது. கிரிக்கெட் வீரர் சேவாக், வீராங்கனை மித்தாலிராஜ், பஞ்சாப் ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

வறண்டு வரும் நதிகளை மீட்டு, அவற்றின் அடிப்படை நீரோட்டத்தை அதிகரித்து, அவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ‘நதிகளை மீட்போம்’ என்ற விழிப்புணர்வு இயக்கம் உருவாகியுள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பத்நோர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலிராஜ், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், மஹிந்திரா குழுமத்தின் மூத்த துணை இயக்குநர் விஜய்ராம் நக்ரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதையொட்டி, பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தனியார் நிறுவனப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

நதிகளின் நீரோட்டத்தை அதிகரிக்கத் தேவையான தீர்வுகளை விஞ்ஞான ரீதியாக வரையறுத்து, விவசாயிகளின் வாழ்வில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு உடனடியாக ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். இது தொடர்பான திட்டம், அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.

வேளாண், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பொருளாதார, அரசியல் சட்ட நிபுணர்களைக் கொண்ட குழு இந்தப் பரிந்துரையை உருவாக்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களிடம் இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்படுகிறது.

16 மாநில முதல்வர்கள்

இதற்காக இன்று முதல் 30 நாட்களுக்கு நாடு முழுவசும் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், 7 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு பயணித்து, 16 மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்களைச் சந்திக்கிறார். அவருடன் எல்லை பாதுகாப்புப் படையினரும் பயணம் செல்கின்றனர்.

மேலும், 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, புதுச்சேரி, சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

விழிப்புணர்வு இயக்கத்துக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இந்திய தொழில் சம்மேளனம் (சிஐஐ), மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய ரயில்வே மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளின் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் 8000980009 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து ஆதரவைத் தெரிவிக்கலாம் என்று நதிகளை மீட்போம் இயக்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x