Published : 14 Mar 2023 12:23 AM
Last Updated : 14 Mar 2023 12:23 AM

கடம்பூர் ராஜுவுக்கு நாவடக்கம் தேவை: பாஜகவின் நாராயணன் திருப்பதி

கடம்பூர் ராஜு மற்றும் நாராயணன் திருப்பதி | படம்: ட்விட்டர்

சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நாவடக்கம் தேவை என பாஜகவின் தமிழக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது.

“தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுகவின் கடம்பூர் ராஜு அவர்கள், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசியுள்ளதோடு மரியாதைக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை அவர்கள் டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல் துறைக்கு திரும்பி விடுவார் என்றும். ‘அவன், இவன்’ என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு, அரசியலில் கத்துக்குட்டி என்று விமர்சித்து பேசியிருப்பது அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு.

டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுகதான் என்பதை கடம்பூர் ராஜு உணர வேண்டும். தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி, நாகரீக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்க தான் அண்ணாமலை அவர்களின் அரசியல் பிரவேசம் என்று கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல. மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தமிழகத்தில் தான் என்பதையும், நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உள்ள பாஜக அரசுக்கு மாற்றாக கண்ணுக்கெட்டிய காலம் வரையில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை என்று தெரியாமல் பேசுகிறீர்கள் கடம்பூர் ராஜு அவர்களே.

அண்ணாமலை அவர்கள் ஜெயலலிதா அவர்களை பெருமைப்படுத்தியே பேசினார் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத, ஒரு சிறந்த தலைவரை போல் தான் இருப்பேன் என்று அண்ணாமலை அவர்கள் பேசியதில் ஜெயலலிதா அவர்களின் உறுதியான தன்மையை உணர்த்தித்தான் என்பதையும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றும் தெரியாத கத்துக்குட்டி கடம்பூர் ராஜு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எது பெருமை, எது சிறுமை என்பது கூட புரிந்து கொள்ள முடியாதவர் செய்தி துறை அமைச்சராக எப்படி இருந்தார் என்பது வியப்பளிக்கிறது.

கட்சியை அண்ணாமலை அவர்கள் காலி செய்துவிடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு அவர்களே, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள்.

நெருக்கடி நேரங்களில் கை கொடுத்து, தோளோடு தோள் நின்றவர்களை அவதூறு பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சியுங்கள். இல்லையேல் காலம் பதில் சொல்லும்” என தெரிவித்துள்ளார்.

— Narayanan Thirupathy (@narayanantbjp) March 13, 2023

அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அண்ணாமலை இங்கு தோசையோ, இட்லியோ, சப்பாத்தி சுடவோ வரவில்லை. எப்போதும் என்னுடைய தலைமைப் பண்பு ஒரு மேனேஜரைப் போல இருக்காது. மேனேஜர் போல தாஜா வேலை எல்லாம் செய்ய மாட்டேன். நான் தலைவன். ஒரு தலைவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் நான் இருப்பேன். நான் எடுக்கும் சில முடிவுகள், சிலருக்கு அதிர்ச்சியளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

ஜெயலலிதா, கலைஞர் எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அந்த மாதிரிதான் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன தவிர, மேனேஜராக இருக்க விரும்பவில்லை. எனவே, கட்சி அதிர்வுகளை சந்தித்துக் கொண்டேதான் இருக்கும். கட்சியின் நன்மைக்காக ஒரு தலைவராக முடிவு எடுக்க வேண்டும் என்றால், கொஞ்சம் கூட பயமின்றி எடுப்பேன். டெல்லியில் நம்மைப் பற்றி சொல்லிவிடுவார்களா? டெல்லி நம்மைப் பற்றி இப்படி நினைத்துவிடுமோ? இதையெல்லாம் பார்த்தவன்தான் நான். எனவே இதற்கெல்லாம் கவலைப்பட போவது இல்லை” என சொல்லி இருந்தார். அதையடுத்தே அதிமுகவை சேர்ந்தவர்கள் அது குறித்து தங்கள் கருத்தை சொல்லி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x