Published : 13 Mar 2023 08:18 PM
Last Updated : 13 Mar 2023 08:18 PM
சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர காவல் துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்துசாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்துவருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது.
அபராதத் தொகைரூ.10,000 அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்தப்படுவதில்லை, ஆனால் நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை. மேலும் 7,532 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இதுபோன்ற விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 5.3.2023 முதல் 11.3.2023 வரை அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 545 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை வழக்குகளை இணையதளம் மூலம் செலுத்தினார்கள். மேலும் பலர் அழைப்புமையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால், அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும், அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும், இந்த அழைப்பு மையங்களில் இருந்து சேகரித்தனர். இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 816 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.84,62,500 செலுத்தப்பட்டன.
கடந்த ஆறு வாரங்களில் அழைப்பு மையங்களின் இதே போன்ற நடவடிக்கைகளால் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ. 5,09,16,000 அபராதம் தொகை செலுத்தப்பட்டன. இதனால் ஏழாவது வாரத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 5,738 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.5,93,78,500/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள மதுபோதை வழக்குகளை தீர்வு காண்பதற்காக போக்குவரத்து விதி மீறல்களுக்கு எதிராக செயல்படு பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துகள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ஏற்கனவே இது போன்று மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 347 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளன என்று தெரியப்படுத்திக் கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT