Published : 13 Mar 2023 06:03 AM
Last Updated : 13 Mar 2023 06:03 AM

குருப்-2 முதன்மைத் தேர்வு குளறுபடி விவகாரம்: மறுதேர்வு நடத்தக் கோரி போராட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேர்வெழுதிய இளைஞர்கள்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 முதன்மைத் தேர்வு கடந்த பிப். 25-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகவும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வுகளின் கூட்டமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வர்கள், பயிற்சியாளர்கள் என100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

குரூப்-2 முதன்மைத் தேர்வின்போது அனைத்து தேர்வர்களுக்கும் சமமாக 3 மணி நேரம் வழங்கப்படவில்லை. சில மையங்களில் 15 நிமிடம் வரை குறைவாக அல்லது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப தேர்வர்களுக்கு சாதக, பாதகங்கள் அமைந்தன. மேலும், பல்வேறு மையங்களில் விடைத்தாள்களையும் தேர்வர்கள் மாற்றி எழுதும்படியான சூழல் ஏற்பட்டது. சட்டப்படி செல்லாத இந்த தேர்வின் மூலம் எப்படி ஒருவரின் தகுதியை நிர்ணயிக்க முடியும்.

இதுதவிர, கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வு தேர்ச்சி குறித்து கவலைப்பட வேண்டாம் என விடைத்தாள் திருத்தப்படும் முன்பாகவே டிஎன்பிஎஸ்சி கூறுவது சரியானதல்ல. இவ்வாறு ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளன.

இவற்றை எல்லாம் டிஎன்பிஎஸ்சி கவனத்தில் கொள்ள வேண்டும். எத்தனை பேர் சரியாகத் தேர்வு எழுதினர் என்பதைப் பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்கள் நிலையை பரிசீலனை செய்ய வேண்டும். எனவே, மறுதேர்வு நடத்தி தேர்வர்களின் நலனைப் பாதுகாக்க டிஎன்பிஎஸ்சி முன்வர வேண்டும். அதுவே ஆணையத்தின் மீதானநம்பகத்தன்மையை வலுப்படுத்தும்.

அதேபோல, தேர்வர்கள் குரூப்-2 தேர்வு குளறுபடிகள் குறித்தே கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டியதில்லை. டிஎன்பிஎஸ்சி என்ன முடிவு எடுத்தாலும் அதைஏற்று, அடுத்து வரும் தேர்வில்கவனம் செலுத்த வேண்டும். மாறாக எதிர்மறை எண்ணங்களுக்கு இடமளிக்க வேண்டாம். விரைவில் அரசுப் பணிக்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x