

உதகை: உதகை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை திரும்பினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 6 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 7-ம் தேதி நீலகிரி மாவட்டம் உதகை வந்தார். உதகை ராஜ்பவனில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், உதகை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, சாலை மார்க்கமாக நேற்று கோவை புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் கோவை சென்று ஈஷா யோகா மையத்தை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து, பீளமேடு விமான நிலையம் சென்றார். அப்போது, காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விமானநிலையம் அருகே 50-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கைது செய்தனர். மதியம் 3 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விமானத்தில் சென்னை திரும்பினார்.