Last Updated : 18 Sep, 2017 06:13 AM

 

Published : 18 Sep 2017 06:13 AM
Last Updated : 18 Sep 2017 06:13 AM

யோகா, வண்ணங்கள், நீர், மண் மூலம் சிகிச்சை மருந்தில்லா முறையில் குழந்தை பாக்கியம் பெரும் தம்பதிகள்: அரசு யோகா - இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாதனை

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின்மை, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு யோகா, வண்ணங்கள், நீர், மண் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்தில்லா மருத்துவ முறையில் குழந்தை பாக்கியம் பெற்றதால் பல தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர்.

அலோபதி (ஆங்கில மருத்துவம்), சித்த மருத்துவத்துக்கு இணையாக மருந்து இல்லா மருத்துவ முறையான யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகா, வண்ணங்கள், நீர், மண் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை கட்டி, தோல் நோய், சிறுநீரக கல், இடுப்பு வலி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. குறிப்பாக குழந்தையின்மை, உடல் பருமன், மாதவிடாய் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணம் முடிந்து பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் அவதிப்பட்ட ஏராளமான தம்பதிகளுக்கு சிகிச்சையின் மூலமாக குழந்தைகள் பிறந்துள்ளன. உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த பலர் தங்களுடைய உடல் எடையைக் குறைத்துள்ளனர்.

நோயாளிகள் அதிகரிப்பு

இதுதொடர்பாக அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் ஒய்.தீபா கூறியதாவது:

மருந்து இல்லா மருத்துவம்தான் எங்களுடைய சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை. அதனால் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 350 நோயாளிகள் பல்வேறு பிரச்சினைகளுடன் வருகின்றனர்.

இதில் குழந்தையின்மை, உடல் பருமன், மாதவிடாய் பிரச்சனைகளுடன் வருபவர்கள் அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் உடல் பருமன் பிரச்சினையுடன் வருகின்றனர். ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சைப் பெற்றவர்களும் அதிக அளவில் வருகின்றனர்.

பச்சை காய்கறிகள்

உடலில் உள்ள கழிவுகள், ரத்த ஓட்டம் சரியில்லாதது மற்றும் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை நோய்க்கான முக்கிய காரணம். மருத்துவமனைக்கு வரும் நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்த பிறகு, அவர்களுக்கு தேவையான யோகா பயிற்சியின் மூலம் சிகிச்சை அளிக்கிறோம். அதன்பின்னர் வண்ணங்கள், நீர், மண், காந்தக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையானவர்களுக்கு அக்குபஞ்சர், அக்குபிரசர், மசாஜ் மூலமாகவும் சிகிச்சை கொடுக்கிறோம். நோயாளிகளுக்கு பச்சை காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், சிறுதானியங்கள், பயிர்கள் போன்றவற்றையே உணவாகக் கொடுக்கிறோம்.

குழந்தை பிறப்பு

சிகிச்சைப் பெற்ற பின்னர் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் மனதளவில் அவதிப்பட்ட தம்பதிகளுக்கு குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த தம்பதிகள் குழந்தையுடன் வந்து எங்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். உடல் பருமனால் அவதிப்பட்டவர்கள் தங்களுடைய உடல் எடை குறைந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மருந்து இல்லா மருத்துவ சிகிச்சை முறை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வாறு டாக்டர் ஒய்.தீபா தெரிவித்தார்.

சிகிச்சை முறைகள்

பல்வேறு வண்ணங்களைக் கொண்ட பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி சூரியக் கதிர்கள் படும்படி வைக்கப்படும். சிறிது நேரத்துக்கு பின்னர் நோய்களின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நோயாளிக்கும் குறிப்பிட்ட வண்ணம் கொண்ட பாட்டிலில் உள்ள தண்ணீர் குடிக்க கொடுக்கப்படும். மலச்சிக்கலால் அவதிப்படுபவருக்கு மஞ்சள் வண்ணம் பாட்டில் தண்ணீரும், ஆஸ்துமா நோயாளிக்கு பச்சை வண்ணம் பாட்டில் தண்ணீரும் கொடுக்கப்படும். அதேபோல் பல்வேறு வண்ணங்கள் கொண்ட பாட்டில்களில் எண்ணெய் நிரப்பப்பட்டு சூரியக் கதிர்கள் படும்படி வைத்து, பின்னர் அந்த எண்ணெயைக் கொண்டு நோயாளிகளுக்கு மசாஜ் செய்யப்படும். இதுபோல் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு வண்ணம் உள்ளது. வண்ணங்கள் சிகிச்சை மனதளவில் மாற்றம் கொண்டுவர உதவுகிறது. வாழை இலையால் நோயாளியை மூடி சூரிய கதிர்கள் படும்படி படுக்க வைத்து பின்னர் குளிக்க வைக்கும் சிகிச்சை அளிக்கிறோம்.

நீர் சிகிச்சையில் நீராவி குளியல், தண்டுவட குளியல், இடுப்பு குளியல், கை மற்றும் கால் குளியல் சிகிச்சைகள் இருக்கிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு என சிறப்பு குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மண் சிகிச்சையில் தலை முதல் கால் வரை முழுவதுமாக மண்ணைத் தேய்த்து கொண்டு சூரியக் கதிர்கள் படும்படி நின்ற பின்னர் குளிக்க வைக்கும் சிகிச்சை இருக்கிறது. மேலும் காந்தக சிகிச்சைகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன என்று டாக்டர் ஒய்.தீபா தெரிவித்தார்.

இலவச யோகா வகுப்பு

இந்த மருத்துவமனையில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், 10 மணி முதல் 11 மணி வரையும் மற்றும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அதேபோல் தினமும் பகல் 11.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நோய்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x